உஷார்... உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு 6½ பவுன் நகைகளை இழந்த முதியவர்!
சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் ஒருவர் உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு 6½ பவுன் தங்க நகைகளை இழந்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாகப் பூ வியாபாரம் செய்யும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், தனது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது மகள் குடும்ப விஷயமாக்க வெளியூர் சென்றுள்ளார். இதனால் அந்த முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட முதியவர், தனக்கு முன்பே பழக்கமான கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்கப் பூ வியாபாரம் செய்யும் பெண் ஒருவரைத் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். முதியவரின் அழைப்பை ஏற்று அந்தப் பெண்ணும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த சமயத்தில், அந்தப் பெண் திட்டமிட்டபடி முதியவரின் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பியுள்ளார். முதியவர் கவனிக்காத நேரமாகப் பார்த்து, அங்கிருந்த பீரோவைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் தங்க நகைகளைச் சுருட்டிக்கொண்டு, அவசர அவசரமாக வீட்டிலிருந்து நழுவியுள்ளார். நகை திருடப்பட்டது குறித்து அறியாத முதியவர், அந்தப் பெண் சென்ற பிறகு வழக்கம் போல் இருந்துள்ளார்.

வெளியூர் சென்றிருந்த முதியவரின் மகள் வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த தங்க நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்துத் தனது தந்தையிடம் அவர் விபரம் கேட்கவே, முதியவர் பயந்து கொண்டே அன்றைய தினம் நடந்த உண்மைகளை அனைத்தையும் மகளிடம் கொட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதியவரின் மகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக இருந்த அந்தப் பூ வியாபாரி பெண்ணை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 70 வயது முதியவர் உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு நகைகளை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
