உஷார்... இப்படி செய்தாலும் சட்டப்படி குற்றம்... பாஸ்போர்ட்டு புதுப்பிக்க சென்ற இளைஞருக்கு அபராதம் - காவல்துறை விசாரணைக்குப் பரிந்துரை!
தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் விதிகளை மீறி ஒரே நேரத்தில் இரண்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்தது பாஸ்போர்ட் மண்டல அலுவலக (Passport Seva Kendra) விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த உசேன் (38) என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் முன்னதாகத் தனது பழைய பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்துப் புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இந்நிலையில், தொலைந்து போன பழைய பாஸ்போர்ட் மீண்டும் கிடைத்த பின்னரும், அவர் அதனை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒப்படைக்காமல் புதிய மற்றும் பழைய என இரண்டையும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

உசேன் மீண்டும் தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தபோது, பாஸ்போர்ட் சேவா கேந்திரா அதிகாரிகளின் ஆவணச் சரிபார்ப்பு மற்றும் தரவுத் தள விசாரணையில் அவர் ஒரே நேரத்தில் இரண்டு பாஸ்போர்ட்டுகளைப் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்திய பாஸ்போர்ட் சட்ட விதிகளின்படி ஒரே நேரத்தில் இரண்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோத குற்றமாகும். இதன் காரணமாக அவருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டதோடு, இச்சம்பவம் குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
