உஷார்... டாஸ்மாக் கடையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான மது பாட்டில் விற்பனை!

 
டாஸ்மாக் ஒயின் மது பீர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பே காலாவதியான பழைய ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ஒருவர் ஒயின் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். திறந்தபோது அந்தப் பாட்டிலில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தமடைந்த அவர், அந்தப் பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்த தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியைச் சோதித்துப் பார்த்துள்ளார்.

அப்போது, அந்த ஒயின் பாட்டில்கள் கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே தங்களின் காலாவதி காலத்தை எட்டியவை என்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கடையின் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகின. "இவற்றைக் குடித்துவிட்டு பொதுமக்களுக்கு உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?" என்று அப்பகுதி மக்களும் மதுப்பிரியர்களும் கடும் ஆத்திரமும் அச்சமும் அடைந்துள்ளனர்.

இது குறித்துக் தகவலறிந்த சிறுவலூர் காவல்துறையினர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு எஞ்சியிருந்த 13 காலாவதியான ஒயின் பாட்டில்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக்

முன்னதாகக் கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் இவ்வாறான பழைய மதுபானங்கள் விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது ஈரோட்டில் நடப்பாண்டிலும் இத்தகைய சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.