உஷார்... இனி உங்க மெசேஜ்களை மெட்டா நிறுவனம் படிக்கும்!" - இன்ஸ்டாவில் மே 8 முதல் 'என்கிரிப்ஷன்' பாதுகாப்பு நீக்கம்!

 
இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளுக்கான ரகசியப் பாதுகாப்பைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. வரும் மே 8-ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறையில் இருந்த 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' முறையில், ஒரு செய்தியை அனுப்பியவர் மற்றும் அதைப் பெறுபவர் ஆகிய இருவரைத் தவிர, மூன்றாவதாக அந்தச் செய்தியை யாரும் பார்க்க முடியாது. ஏன், மெட்டா நிறுவனமே நினைத்தாலும் படிக்க முடியாது.

இன்ஸ்டா

மே 8-ம் தேதிக்குப் பிறகு, இந்தப் பாதுகாப்பு நீக்கப்படுவதால், மெட்டா நிறுவனம் பயனாளர்களின் உரையாடல்களை அணுகவும், கண்காணிக்கவும் வாய்ப்பு ஏற்படும். இந்த மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய செய்திகள் மற்றும் புகைப்படங்களை மே 8-ம் தேதிக்கு முன்பாகவே பயனாளர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என மெட்டா தெரிவித்துள்ளது. இது குறித்த வழிமுறைகள் இன்ஸ்டாகிராம் செயலியின் உள்ளே வழங்கப்பட்டுள்ளன.

மெட்டா நிறுவனத்தின் இந்த முடிவுக்குப் பின்னால் 'குழந்தைகளின் பாதுகாப்பு' குறித்த கவலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது: என்கிரிப்ஷன் முறையில் செய்திகள் ரகசியமாக இருப்பதால், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சுரண்டல்களைக் கண்டறிந்து அறிக்கை அளிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக மெட்டா கருதுகிறது.

இன்ஸ்டா

தனிப்பட்ட ரகசியம் முக்கியம் என்றாலும், பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமான கண்காணிப்பிற்கு ரகசியக் குறியீடுகள் தடையாக இருப்பதாக அந்நிறுவனத்தின் உள் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே, மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் என்கிரிப்ஷன் முறையைத் தொடர்வதில் மெட்டா தயக்கம் காட்டி வருகிறது.

இன்ஸ்டாகிராம் செயலியின் மெசேஜ் பகுதியில்  உள்ள 'Instagram Features' என்ற பிரிவில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் உரையாடல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், மே 8-க்கு முன்பே முக்கியமான தகவல்களைப் பேக்கப் எடுத்துக் கொள்வது நல்லது.