உஷார்.. தமிழகத்திற்கு 'ஹீட்வேவ்' எச்சரிக்கை... இன்று முதல் ஜூன் வரை தகிக்கும் வெயில் - வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டும்!

 
வெயில் வெயில்

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 10ம் தேதிக்குப் பிறகு வெப்பத்தின் வீச்சு பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும். இதனால் பகல் நேரத்தில் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகமாக இருக்கும். வட தமிழகக் கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் உள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 'வெப்ப அலை' வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். பொதுவாக ஏப்ரலில் 2ம் தேதி முதல் 3 நாட்கள் நிலவும் வெப்ப அலை, இந்த ஆண்டு 4 முதல் 6 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

வெயில் வெப்பம் மாணவிகள் கல்லூரி

ஏற்கனவே ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை (38°C) கடந்து பதிவாகி வருகிறது. வரும் நாட்களில் வேலூர், திருத்தணி போன்ற பகுதிகளிலும் வெயில் சுட்டெரிக்கும்.

வெப்பம் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்யக்கூடும். இது தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், ஒட்டுமொத்த வெப்ப அழுத்தத்தில் பெரிய மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மதிய நேரங்களில் (மதியம் 12 மணி முதல் 3 மணி வரை) நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.