உஷார்.. தமிழகத்தில் பிப்.28 வரை மழைக்கு வாய்ப்பு.. மார்ச் முதல் வறண்ட வானிலை!

 
மழை

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 வரை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி போன்றவை) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 1 முதல் 3 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வானிலை பெரும்பாலும் வறண்டு காணப்படும். இன்றும் (பிப். 26), நாளையும் (பிப். 27) தமிழகத்தின் வட மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்., கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவும்.

பனிமூட்டம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 33°C வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°C வரையிலும் இருக்கக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததைத் தொடர்ந்து, தற்போது நிலவும் வளிமண்டலச் சுழற்சியால் பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், கோடை காலத்திற்கு முந்தைய இந்த லேசான மழை வெப்பத்தைத் தணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.