உஷார்.. நாளை அமலுக்கு வரும் 3 முக்கிய நிதியியல் மாற்றங்கள் - உடனே தெரிஞ்சுக்கோங்க!

 
மகளிர் உரிமைத் தொகை பணம் ரொக்கம் ரூபாய்

நாளை ஜூலை 1ம் தேதி முதல், நாடு முழுவதும் சாதாரண மக்களின் பாக்கெட் மற்றும் அன்றாட நடைமுறைகளைப் பாதிக்கும் வகையிலான மூன்று மிக முக்கியமான புதிய விதிமுறைகளும், சலுகைகளும் அமலுக்கு வருகின்றன. 

1. ஆதாரில் மின்னஞ்சல் புதுப்பிக்கப் புதிய சலுகை

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு புதிய எளிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை இணைக்க அல்லது புதுப்பிக்க வசூலிக்கப்பட்டு வந்த ₹75 கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது. நாளை ஜூலை 1ம் தேதி முதல் வருகிற டிசம்பர் 31, 2026 வரை இந்தச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த இலவசச் சலுகையானது பொதுமக்கள் தங்களது மொபைலில் உள்ள அதிகாரப்பூர்வ புதிய ஆதார் செயலி மூலம் ஆன்லைனில் புதுப்பித்தால் மட்டுமே பொருந்தும். இ-சேவை மையங்கள் அல்லது ஆதார் மையங்களுக்கு நேரில் சென்றால் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும்.

பாஸ்போர்ட்

2. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்கள் அதிரடி உயர்வு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் விதிகளில் திருத்தம் செய்து கட்டணங்களை கணிசமாக உயர்த்தியுள்ளது. சாதாரண பாஸ்போர்ட் - 36 பக்கங்கள். புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கான கட்டணம் ₹1,500-லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் பாஸ்போர்ட் - 36 பக்கங்கள். அவசரத் தேவைகளுக்கான தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் ₹3,500-லிருந்து ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் பக்கங்கள் 60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் சாதாரண முறையில் ₹3,500 என்றும், தட்கல் முறையில் ₹6,000 என்றும் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குப் புதிய விண்ணப்பக் கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிஆர்

3. வருமான வரித் தாக்கல் (ITR) செய்யக் கடைசி வாய்ப்பு

2025-26 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி கணக்குத் தாக்கல் செய்பவர்களுக்கான இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பளம் பெறுபவர்கள், தனிநபர்கள் மற்றும் எளிய மூலதன ஆதாயம் கொண்டவர்கள் தங்களது ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான இறுதித் தேதி வரும் ஜூலை 31, 2026 ஆகும்.

இந்தத் தேதிக்குள் கணக்குத் தாக்கல் செய்யத் தவறினால், வருமானம் ₹5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ₹5,000 வரையிலும், அதற்குள் உள்ளவர்களுக்கு ₹1,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும். மேலும், நடப்பு ஆண்டு நஷ்டங்களை அடுத்த ஆண்டிற்குக் கொண்டு செல்ல முடியாது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் நாளை முதல் நேரடியாக நடைமுறைக்கு வருவதால், பாஸ்போர்ட் எடுக்கத் திட்டமிடுபவர்கள், ஆதார் விவரங்களை மாற்ற நினைப்பவர்கள் மற்றும் வரி செலுத்துவோர் இந்தத் தகவல்களைக் கருத்தில் கொண்டு தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது அவசியமாகும்.