உஷார்... ராட்சத ராட்டினத்தில் தலைமுடி சிக்கி இளம்பெண்ணின் உச்சந்தலை தோல் பிய்ந்த கொடூரம்!

 
ராட்டினம்

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழா பொருட்காட்சியில், ராட்டினத்தில் தலைமுடி சிக்கிய விபத்தில் 25 வயது இளம்பெண்ணின் உச்சந்தலை தோல் முழுவதுமாகப் பிய்ந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யவத்மால் மாவட்டத்திலுள்ள புனேஷ்வர் கோவில் அருகே 'தன்ஹா போலா' திருவிழாவை ஒட்டி அமைக்கப்பட்ட பொருட்காட்சிக்கு, புல்சவாங்கி பகுதியைச் சேர்ந்த பாலி மரோட்டி (25) என்ற இளம்பெண் சென்றுள்ளார். அங்கு கைகளால் இயக்கப்படும் ஜெயண்ட் வீல் ராட்டினத்தில் அவர் ஏறி அமர்ந்த நிலையில், ராட்டினம் சுழலத் தொடங்கிய சில வினாடிகளிலேயே அவரது நீண்ட தலைமுடி ராட்டினத்தின் சுழலும் பேரிங்கில் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் கொண்டது.

ராட்டினம்

ராட்டினம் வேகமாகச் சுழன்றதால், அந்தப் பெண்ணின் தலைமுடி பலமாக இழுக்கப்பட்டு உச்சந்தலையின் தோல் முழுவதுமாகப் பிய்ந்து வந்தது. உடனடியாக ராட்டினம் நிறுத்தப்பட்டு, படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற பொழுதுபோக்குப் பொருட்காட்சிகளில் முறையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ராட்டினங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் தங்களது தலைமுடியை உறுதியாகவும் பாதுகாப்பாகவும் கட்டிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.