உஷார்.. இனி ரயில் பயணத்தில் இதையெல்லாம் செய்தால் அபராதம் நிச்சயம்!
ரயில் பயணங்களின் போது சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செல்போனில் சத்தமாகப் பேசுவது அல்லது பாடல்கள் கேட்பதைத் தவிர்க்குமாறு இந்திய ரயில்வே கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய இந்த ரீல்ஸ் வீடியோ எடுக்கிறோம்ன்னு சுத்திக்கிட்டு இருக்கிறவங்க இதை தெரிஞ்சுக்கோங்கப்பா...
ரயில்களில் பயணிக்கும் போது சிலர் செல்போனில் உரக்கப் பேசுவதும், ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்பதும் மற்ற பயணிகளின் அமைதியைக் கெடுப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதனை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

செல்போனில் பாடல்கள் கேட்க விரும்பும் பயணிகள் கண்டிப்பாக 'ஹெட்செட்' பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் ஸ்பீக்கரில் சத்தமாகப் பாடல்களை ஒலிக்கவிடக் கூடாது. செல்போனில் பேசும்போது மற்றவர்களுக்குக் கேட்காத வண்ணம் மெதுவான குரலில் பேச வேண்டும்.
செல்போன் அழைப்புகளுக்கான ரிங்டோன் சத்தத்தைக் குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் இத்தகைய சத்தங்களைத் தவிர்க்க வேண்டும். யாராவது இந்தப் பாதுகாப்பு விதிகளை மீறி அதிக சத்தத்துடன் செயல்பட்டால், பாதிக்கப்பட்ட பயணிகள் உடனடியாக ரயில்வே ஊழியர்களிடம் அல்லது 139 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்கலாம்.

புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணங்கள் இனிமையானதாகவும், தொந்தரவற்றதாகவும் இருக்கப் பயணிகள் இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.
