உஷார்... 'நோ' சொன்னாலும் பணம் பறிபோகும்... வாட்ஸ் அப் மூலம் புதிய டிஜிட்டல் மோசடி - சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

 
வாட்ஸ் அப்

தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரில் நாளுக்கு நாள் புதிய வடிவங்களில் அரங்கேறி வரும் சைபர் மோசடிகளில் தற்போது வாட்ஸ்-அப் பேங்கிங் மோசடி புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. எந்தவொரு இணைப்பையும் (Link) கிளிக் செய்யாமலோ அல்லது ஒருமுறை கடவுச்சொல்லைப் பகிராமலோ மக்களின் கணக்கில் உள்ள பணம் சுவீகரிக்கப்படுவதாகச் சைபர் கிரைம் போலீசார் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ்-அப் மூலம் அரங்கேறும் இந்த மோசடியில், பயனர்களின் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகைப் பணம் எடுக்கப்பட்டதாக முதலில் ஒரு போலி குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

வாட்ஸ் அப்

அந்தச் செய்தி வந்த உடனேயே இரண்டாவது செய்தி அனுப்பப்படும். அதில், "இந்தப் பரிவர்த்தனையை நீங்கள் செய்யவில்லை என்றால், தயவுசெய்து 'நோ' என்று பதிலளிக்கவும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தத் தகவலில் மறைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ எக்ஸிகியூஷன் ஃபைல், பயனர்கள் 'நோ' என்று பதிலளித்தவுடன் செயல்படத் தொடங்கிவிடும்.

இந்தத் தீங்கு விளைவிக்கும் ஃபைல் ஆக்டிவேட் ஆனதும், ஹேக்கர்களுக்கு அந்த மொபைல் போன் மீதான முழுமையான கட்டுப்பாடும் கிடைத்துவிடும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் அபேஸ் செய்யப்படுகிறது. இதுதொடர்பான சம்பவத்தில் ஒருவர் எந்த லிங்க்கையும் கிளிக் செய்யாமல், வெறும் 'நோ' என்று பதிலளித்ததாலேயே ரூ.1.70 லட்சத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்

தெரியாத எண்களிலிருந்து வாட்ஸ்-அப் மூலமாகப் பணம் எடுக்கப்பட்டதாகச் செய்தி வந்தால் எக்காரணம் கொண்டும் பதிலளிக்கக் கூடாது; உடனடியாக அந்தச் செய்தியை நீக்கிவிட வேண்டும். வந்த செய்தி உண்மையா என்பதைச் சரிபார்க்கத் தொடர்புடைய வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வங்கிகள் ஒருபோதும் வாட்ஸ்-அப் வழியாக 'Yes' அல்லது 'No' என்று கேட்டு குறுஞ்செய்திகளை அனுப்பாது என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.