உஷார்... நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சிறு கீறல் இருந்தாலும் புற்றுநோய் அபாயம்... அப்போலோ சங்கீதா ரெட்டி பகீர் தகவல்!
நவீன சமையலறைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட 'ஒட்டாத' சமையல் பாத்திரங்கள், உண்மையில் ஒரு மெதுவான நஞ்சாக மாறிவருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் சங்கீதா ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் விரிவான விழிப்புணர்வுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சங்கீதா ரெட்டி தனது பதிவில், "உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் ஒருபோதும் பிளாஸ்டிக்கை உணவாகப் பரிமாற மாட்டீர்கள். ஆனால், நான்-ஸ்டிக் பாத்திரத்தில் ஏற்படும் ஒரு சிறிய கீறல், நாம் சமைக்கும் உணவில் ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்களைக் கலக்கிறது."
You would never knowingly serve plastic to your family.
— Dr. Sangita Reddy (@drsangitareddy) April 6, 2026
And yet, a simple scratch on a non-stick pan may be doing exactly that releasing thousands, even millions, of invisible particles into the food we cook every day.
This isn’t a distant environmental issue. It’s in our… pic.twitter.com/0Lfu3Ff4OC
இந்தத் துகள்களில் PFAS (Per- and Polyfluoroalkyl Substances) உள்ளன. இவை மனித உடலில் நுழைந்தால் ஒருபோதும் சிதைவடையாது. அதனால்தான் இவை 'Forever Chemicals' என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரசாயனங்கள் இரத்த ஓட்டத்தில் கலப்பதன் மூலம் பின்வரும் தீவிரமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்:
குறிப்பாகச் சிறுநீரகம் மற்றும் விரைப்பைப் புற்றுநோய்களுடன் இவை தொடர்புபடுத்தப்படுகின்றன. உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது. உடலின் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கிறது.
ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?
2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, டெஃப்ளான் பூசப்பட்ட பாத்திரத்தில் ஏற்படும் ஒரு சிறிய கீறல் 9,000-க்கும் மேற்பட்ட நுண்ணிய துகள்களை வெளியேற்றுகிறது. இதுவே மிகவும் தேய்ந்த பாத்திரமாக இருந்தால், அந்த எண்ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். முன்பு PFOA என்ற அமிலம் பயன்படுத்தப்பட்டது, 2013-க்குப் பிறகு புதிய வகை PFAS பயன்படுத்தப்பட்டாலும், அவையும் அதே போன்ற உடல்நலக் கவலைகளையே ஏற்படுத்துகின்றன.
"ஆரோக்கியம் மருத்துவமனைகளில் மட்டும் உருவாவதில்லை - அது ஒவ்வொரு நாளும் வீட்டில் நாம் எடுக்கும் முடிவுகளின் மூலம் செதுக்கப்படுகிறது" என்று கூறும் சங்கீதா ரெட்டி, பின்வரும் மாற்றங்களைப் பரிந்துரைக்கிறார்.
நான்-ஸ்டிக் பாத்திரங்களுக்குப் பதிலாக துருப்பிடிக்காத எஃகு அல்லது பாரம்பரிய வார்ப்பிரும்பு பாத்திரங்களுக்கு மாறுவது பாதுகாப்பானது. நோய் வந்தபின் குணப்படுத்துவதை விட, சமையல் முறையை மாற்றுவது ஒரு சக்திவாய்ந்த ஆரோக்கிய முடிவாகும்.
"இது நம்மைப் பாதிக்குமா என்பது கேள்வியல்ல; நாம் எதை மாற்றத் தேர்ந்தெடுப்போம் என்பதே கேள்வி" என்ற அழைப்புடன் அவர் தனது விழிப்புணர்வை நிறைவு செய்துள்ளார்.
