உஷார்... இனி செல்ஃபி எடுப்பதிலும் ஆபத்தா? உங்க இருப்பிடத்தை ரகசியமாகத் துப்பறியும் ‘ஜியோஸ்பை AI’! எப்படி செயல்படுகிறது?!

 
ஜியோ ஸ்பை ஜியோஸ்பை

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதற்கு ஜியோஸ்பை AI ஒரு சிறந்த உதாரணமாகும். புகைப்படங்களில் இருக்கும் இருப்பிடத் தரவுகள் (GPS Metadata) இல்லாமலேயே, வெறும் பிக்சல்களை வைத்து ஒரு புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதை ஜியோஸ்பை கண்டறிந்து விடுகிறது.

பொதுவாக ஒரு புகைப்படத்தைப் பகிரும் போது அதன் மெட்டாடேட்டாவைநீக்கிவிட்டால் நமது தனியுரிமை பாதுகாக்கப்படும் என்று நாம் கருதுகிறோம். ஆனால், ஜியோஸ்பை ஏஐ அந்த நம்பிக்கையை உடைக்கிறது. அந்த புகைப்படத்தில் உள்ள கட்டிடங்களின் அமைப்பு, சாலைகளின் வடிவம், அங்குள்ள தாவரங்கள், மின் கம்பங்கள் மற்றும் தட்பவெப்ப நிலை போன்ற சிறு சிறு விவரங்களையும் கூட ஜியோஸ்பை பகுப்பாய்வு செய்கிறது. இந்தத் தகவல்களைத் தன்னிடம் உள்ள கோடிக்கணக்கான உலகளாவிய புகைப்படத் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தைத் துல்லியமாகக் கணித்து விடுகிறது. நகரப் பகுதிகளில் இந்தத் தொழில்நுட்பம் ஒரு தெருவின் பெயர் அல்லது கட்டிடத்தின் கதவு எண் வரை துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டது.

ஜியோ ஸ்பை ஜியோஸ்பை

சாதாரண செல்ஃபி புகைப்படங்களில் கூட நாம் எங்கே இருக்கிறோம், நமது வீட்டின் முகவரி என்ன என்பதைத் தற்செயலாக ஜியோஸ்பை வெளிப்படுத்திவிடக் கூடும். இந்தக் கருவி தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், ஒருவரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது எளிதாகிவிடும். நீங்கள் பழைய புகைப்படங்களைப் பதிவேற்றினாலும், AI மூலம் அதன் பின்னணியை ஆராய்ந்து உங்களைக் கண்டறிய முடியும்.

தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மியாமி-டேட் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். புலனாய்வுத் துறையினருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், பொதுமக்களின் அந்தரங்கத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.

ஜியோ ஸ்பை ஜியோஸ்பை

டிஜிட்டல் உலகில் இனி படங்கள் வெறும் காட்சிகள் மட்டுமல்ல, அவை உங்களைப் பற்றிய விரிவான தகவல்களைச் சுமந்து செல்லும் தரவு மூலங்கள் என்பதை ஜியோஸ்பை ஏஐ உணர்த்துகிறது.