உஷார்.. அறிகுறியில்லாமல் எலும்புகளைப் பலவீனமாக்கும் 'எலும்புப்புரை' நோய்.. தடுக்கும் வழிமுறைகள்!
மனித உடலின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பிற்கும் ஆதாரமாக விளங்குவது எலும்பு மண்டலமாகும். ஆனால், எந்தவிதப் பூர்வாங்க அறிகுறிகளும் இல்லாமல் உடலின் உள்ளே அமைதியாகப் பரவி, எலும்புகளைப் பலவீனமாக்கி உடைக்கும் ஒரு ஆபத்தான பாதிப்புதான் 'எலும்புப்புரை' நோய் ஆகும்.
சாதாரணக் கண்களுக்குத் தெரியாமல், எலும்புகளின் உட்புற அடர்த்தி மற்றும் திசுக்களின் வலிமை படிப்படியாகக் குறைவதே எலும்புப்புரை நோய் எனப்படுகிறது. இந்நோய் பாதிப்பு ஏற்படும் போது, எலும்புகள் தங்களின் புரைத்தன்மையை இழந்து, தேன்கூடு போல உள்பகுதியில் அதிகத் துவாரங்களுடன் மிக மென்மையாக மாறிவிடுகின்றன. இதன் காரணமாக, லேசான தடுமாற்றம், சிறிய ரக அடி அல்லது தும்மல், இருமல் ஏற்படும் போது கூட எலும்புகள் மிக எளிதில் உடையக்கூடிய அபாயகரமான நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இந்த நோய் வயது வரம்பின்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்றாலும், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இதன் பாதிப்பு மிக அதிகமாகக் கண்டறியப்படுகிறது. வயது அதிகரிக்கும் போது உடலின் புதிய எலும்பு உருவாக்கத் திறன் குறைந்து, பழைய எலும்புகள் தேய்மானம் அடைவது அதிகரிப்பதால் முதியவர்கள் இந்நோயால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நின்ற பிறகு, அவர்களது உடலில் 'ஈஸ்ட்ரோஜன்' என்ற ஹார்மோன் சுரப்பு கணிசமாகக் குறைகிறது. இந்த ஹார்மோன் குறைபாடானது எலும்புகளின் அடர்த்தியை மிக வேகமாகச் சரித்து விடுவதால், ஆண்களை விடப் பெண்களே இந்நோய்க்கு அதிக அளவில் ஆளாகிறார்கள்.

நவீன வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக இந்நோய் ஏற்படுவதற்கு எலும்புகளின் உற்பத்திக்கும் வலிமைக்கும் மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்து கால்சியம் ஆகும். அன்றாட உணவில் போதிய கால்சியம் சத்து இல்லாததே எலும்புத் தேய்மானத்திற்கு வழிவகுக்கிறது.
நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின்-டி மிகவும் தேவை. சூரிய ஒளி உடலில் படாமல் எப்போதும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பது வைட்டமின்-டி குறைபாட்டை உருவாக்குகிறது.
உடல் உழைப்பு இல்லாத சொகுசான வாழ்க்கை முறை, முறையான உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் எலும்புகள் தங்களின் இயல்பான பலத்தை இழக்கின்றன.
அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உடலில் உள்ள தாதுச் சத்துக்களை அழித்து எலும்புப்புரை நோயை விரைவுபடுத்துகிறது.
எலும்புப்புரை நோய் வராமல் தடுக்கவும், ஆரம்பக் கட்டத்திலேயே எலும்புகளை வலுப்படுத்தவும் மருத்துவர்கள் சில ஆலோசனைகளை வழங்குகின்றனர். அதன்படி, அன்றாட உணவில் பால், தயிர், முட்டை, கீரைகள், கேழ்வரகு மற்றும் நவதானியங்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் அதிகாலை அல்லது மாலை வேளையில் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான சூரிய ஒளியில் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின்-டி இயற்கையாகவே கிடைக்கும். மேலும், மருத்துவர்களின் ஆலோசனையோடு 'பிஎம்டி'பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நமது எலும்புகளின் ஆரோக்கிய நிலையை முன்கூட்டியே அறிந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
