உஷார்.. இன்று நாடு முழுவதும் 12.5 லட்சம் மெடிக்கல் கடை உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!
இன்று நாடு முழுவதும் சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் முற்றிலுமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி, அகில இந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்து வணிகர்களின் அமைப்பு (AIOCD) சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாளக் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முறையான மருந்துச் சீட்டு மற்றும் எவ்விதச் சரிபார்ப்பும் இன்றி ஆன்லைனில் ஆபத்தான மருந்துகள் தங்குதடையின்றி விற்கப்படுவதாகப் போராட்டக் குழுவினர் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, ஆன்லைன் மூலம் தகுதிவாய்ந்த மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே வலி நிவாரணிகள், தூக்க மாத்திரைகள் மற்றும் விபரீதமான கருக்கலைப்பு மருந்துகள் சிறுவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா காலத்தில் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்ட இணைய வழி மருந்தக (e-pharmacy) செயல்பாட்டுக்கான அரசாணையை, ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மருந்து வணிகர்கள் சங்கம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

மேலும், கார்ப்பரேட் ஆன்லைன் மருந்தகங்கள் வழங்கும் அதிகப்படியான தள்ளுபடிகள் காரணமாக, உள்ளூர் சில்லறை மருந்துக்கடைகளால் அவர்களுடன் சந்தையில் போட்டியிட முடிவதில்லை என்றும், இது சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இன்று ஒரு நாள் முழுவதும் மெடிக்கல் கடைகள் மூடப்பட உள்ளதால், நோயாளிகளுக்கு ஏற்படும் இன்னல்களைச் சமாளிக்க அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்குதடையின்றி உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மையங்களைத் திறக்க அதிகாரிகள் தற்பொழுது உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
