உஷார்... வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை - பணபரிவர்த்தனைகளைப் ப்ளாண் பண்ணிக்கோங்க!
ஜூன் மாத இறுதி வாரத்தில் மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறைகளை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு மண்டலங்களில் உள்ள வங்கிகளுக்குத் தொடர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விவரங்கள் தெரிவிக்கின்றன.
மண்டலங்கள் மற்றும் மாநில வாரியான பண்டிகை விடுமுறைகளின் அடிப்படையில், ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை வெவ்வேறு பகுதிகளில் ஜூன் 25 (வியாழக்கிழமை) மொஹரம் (ஆஷுரா தினம்) பண்டிகையை முன்னிட்டு விஜயவாடாவில் மடும் வங்கிகளுக்குத் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26 (வெள்ளிக்கிழமை) மொஹரம் காரணமாக இன்று பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது. ஜூன் 27 (சனிக்கிழமை) ஜூன் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் வழக்கமான வங்கி விடுமுறை நாளாகும். ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர பொது விடுமுறை நாள்.

வங்கிகளுக்குத் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால், நேரடியாக வங்கி கிளைகளுக்குச் சென்று மேற்கொள்ளப்படும் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விடுமுறை நாட்களில் கணினி வழி பரிவர்த்தனைகள் நடந்தாலும், காசோலை பரிமாற்றங்கள் மற்றும் பெரிய அளவிலான பணத் தீர்வுகள் தாமதமாகலாம்.
வங்கிக் கணக்கு தொடங்குதல், புதிய கணக்கு ஆவணங்கள் சமர்ப்பித்தல் (கேஒய்சி), மற்றும் நேரில் சென்று பணம் எடுத்தல் அல்லது டெபாசிட் செய்தல் போன்ற சேவைகள் பாதிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது அத்தியாவசிய நிதி சார்ந்த தேவைகளையும், அவசர வங்கிப் பணிகளையும் இந்த விடுமுறை நாட்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளுக்கான மாற்று டிஜிட்டல் வழிமுறைகள் எவ்வித தடையுமின்றி 24 மணி நேரமும் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணத் தேவைக்காக ஏடிஎம்களில் போதிய அளவு ரொக்கப் பணம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் போன்ற சேவைகள் தடையின்றி இயங்கும். கூகுள் பே, ஃபோன்பே மற்றும் இதர யுபிஐ வழித்தடங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் உடனடி பணப் பரிமாற்ற சேவைகள் எப்போதும் போல் துரிதமாகச் செயல்படும்.
