உஷார்... போலியோ சொட்டு மருந்து முகாம் ... எந்தெந்தக் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்? மருத்துவர்கள் எச்சரிக்கை!
போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மாபெரும் தேசிய போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. எனினும், ஒரு சில குறிப்பிட்ட மருத்துவக் காரணங்களைக் கொண்ட குழந்தைகள் இந்த வாய்வழிப் போலியோ சொட்டு மருந்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுநல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்று நடைபெறும் முகாம்களில், பின்வரும் உடல்நலக் குறைபாடுகள் அல்லது மருத்துவச் சிகிச்சைகளில் இருக்கும் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது: புற்றுநோய்க்காகத் தற்போது தீவிரமான கீமோதெரபி அல்லது கதிரியக்கச் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து தரக்கூடாது.
சில குறிப்பிட்ட நாள்பட்ட நோய்களுக்காக, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நீண்ட நாட்களாக அதிக அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகள் அல்லது மருந்துகளை உட்கொண்டு வரும் குழந்தைகளுக்கு இதனைத் தவிர்க்க வேண்டும்.

பிறவியிலேயே அல்லது இதர மருத்துவக் காரணங்களால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் கடுமையாகக் குறைந்துள்ள குழந்தைகளுக்கு வாய்வழிப் போலியோ சொட்டு மருந்து வழங்கக் கூடாது.
வாய்வழி போலியோ சொட்டு மருந்தில் பலவீனப்படுத்தப்பட்ட உயிருள்ள வைரஸ் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணக் குழந்தைகளுக்கு இது முழுமையாகப் பாதுகாப்பானது என்றாலும், மேற்கூறிய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
மேற்கண்ட மருத்துவப் பின்னணி கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள், இன்று பொது முகாம்களுக்குத் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, தங்களது குழந்தைகளைப் பராமரிக்கும் பிரத்யேகக் குழந்தைகள் நல மருத்துவரை நேரில் அணுகி, அவர்களின் ஆலோசனையின் படி பாதுகாப்பான மாற்று வழிமுறைகளைப் (உதாரணமாக, கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசி மூலம் செலுத்தப்படும் IPV தடுப்பூசி) பின்பற்றுமாறு மருத்துவத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மற்றபடி, சாதாரணக் காய்ச்சல், சளி அல்லது இருமல் உள்ள குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்தை தாராளமாக வழங்கலாம் என்பதால், தகுதியுள்ள மற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் இன்று தவறாமல் சொட்டு மருந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதனால மிஸ் பண்ணாதீங்க.. மெட்ரோ நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் என்று தமிழகம் முழுவதும் இன்று முகாம் நடைபெறுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் இன்று போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுவதை உறுதிபடுத்திக்கோங்க.
