உஷார்... வங்கிகளில் ரொக்கப் பணப் பரிமாற்றத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ஆர்பிஐ!
வங்கிக் கணக்கு இல்லாத பொதுமக்களும் எளிய முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வகையில், தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் முறையில் புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்து ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான புதிய கட்டுப்பாடுகளும் வழிகாட்டுதல்களும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன.

இனி வங்கிக் கணக்கு இல்லாத தனிநபர்களும் நேரடியாக வங்கி கிளைக்குச் சென்று, ரொக்கப் பணத்தைச் செலுத்தி 'NEFT' முறையில் மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த எளிய பரிமாற்ற முறை மூலம் ஒரு பரிமாற்றத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை மட்டுமே அனுப்ப முடியும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணப் பரிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் வங்கிகளுக்குப் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. பணம் அனுப்புபவரின் உண்மையான அடையாள ஆவணங்கள் மற்றும் செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை வங்கிகள் தீவிரமாகச் சரிபார்த்துத் தங்களது பதிவுகளில் கட்டாயம் சேகரிக்க வேண்டும்.

வங்கி கணக்கு இல்லாதவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய ரொக்கப் பணப் பரிமாற்றங்களை அந்தந்த வங்கிகள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
