உஷார்... எமனான ரெடிமேட் தோசை மாவு... 2 குழந்தைகள் பலி - தாய்ப்பால் மூலம் 3 மாதக் குழந்தைக்குப் பரவிய விஷம்!

 
ரெடிமேட் தோசை மாவு ரெடிமேட் தோசை மாவு

அகமதாபாத்தில் ரெடிமேட் தோசை மாவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த அச்சத்தை இச்சம்பவம் அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், நேற்று இரவு கடையில் வாங்கிய 'ரெடிமேட்' தோசை மாவில் தோசை சுட்டுச் சாப்பிட்டுள்ளனர். இதுவே அந்தக் குடும்பத்தின் இரண்டு உயிர்களைப் பறிக்கும் என அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

 7 வகை தானிய தோசை

பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் அவர்களது 4 வயது சிறுமி ஆகியோர் இரவு உணவாகத் தோசை சாப்பிட்டுள்ளனர். உணவு உண்ட சில மணி நேரங்களிலேயே, மூவருக்கும் கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், தோசை சாப்பிடாத அந்தத் தம்பதியினரின் 3 மாதப் பச்சிளம் குழந்தையும் திடீரென உயிரிழந்தது. 

தோசை சாப்பிடாத 3 மாதக் குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது குறித்துப் போலீசார் மற்றும் மருத்துவர்கள் தீவிர ஆய்வு நடத்தினர். இதில், தோசை சாப்பிட்ட தாயின் உடலில் கலந்த நச்சுத்தன்மை, அவர் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த போது அந்தக் குழந்தையையும் தாக்கியிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்தத் தம்பதியினர் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அகமதாபாத் போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

தோசை

அந்தக் குடும்பத்தினர் பயன்படுத்திய மீதமுள்ள தோசை மாவு மற்றும் அவர்கள் வாங்கிய கடையிலிருந்த அதே ரக மாவு பாக்கெட்டுகள் ஆய்வகச் சோதனைக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் மாவு பாக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் என அப்பகுதி கடைகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோடைக் காலம் என்பதால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மாவுப் பொருட்கள் விரைவில் புளித்துப்போகவோ அல்லது பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படவோ வாய்ப்புள்ளது. எனவே, ரெடிமேட் மாவு வாங்கும்போது அதன் காலாவதி தேதியை சரிபார்ப்பதுடன், ஏதேனும் துர்நாற்றம் வீசினால் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.