உஷார்... வாட்ஸ்-அப் மூலம் போலி மெசேஜ் அனுப்பி ரூ.1.90 கோடி மோசடி!

 
மோசடி

சென்னையை அடுத்துள்ள ஆவடியில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் போன்று வாட்ஸ்-அப் மூலம் போலி மெசேஜ் அனுப்பி, நிறுவனத்தின் பொது மேலாளரிடமிருந்து சுமார் 1.90 கோடி ரூபாயை மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் பொது மேலாளரான சௌந்தர்ராஜனுக்கு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று வாட்ஸ்-அப் செயலி மூலம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுப்புவது போன்ற தோற்றத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு உடனடியாக ரூபாய் 1.90 கோடியைச் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அதனை உண்மை என நம்பிய பொது மேலாளர் சௌந்தர்ராஜன், அந்த வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னரே தமக்கு வந்த குறுஞ்செய்தி போலி என்பதும், தான் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டதும் அவருக்குத் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் மோசடி

இது குறித்து பாதிக்கப்பட்ட சௌந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில், புதுடெல்லியைச் சேர்ந்த தீபக் மீனா (27) என்பவர் மோசடி செய்யப்பட்ட ரூபாய் 1.90 கோடியைத் தனது வங்கிக் கணக்கில் பெற்று, பின்னர் அந்தப் பணத்தைப் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பதிவுகளின் உதவியுடன் புதுடெல்லிக்கு விரைந்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு காவல்துறையினர் தீபக் மீனாவைக் கைது செய்ததுடன், பொதுமக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகளையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட தீபக் மீனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் அடைத்த காவல்துறையினர், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.