உஷார்... இனி லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறினால் ரூ.2,500 அபராதம் - ரயில்வே வாரியம் புதிய விதிகள் அமல்!
நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் ரயில்வே வாரியம் புதிய மற்றும் கடுமையான அபராத விதிககளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான பெட்டிகளில் அத்துமீறி நுழையும் ஆண்களுக்கு ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'ஜான் விஸ்வாஸ் சட்டம் 2026'-இன் கீழ் ரயில்வே சட்டம் 1989-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு அபராதத் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

பெண்கள் பயணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் அல்லது இருக்கைகளில் அனுமதி இல்லாமல் பயணிக்கும் ஆண்களுக்கு ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்கள் உடனடியாக ரயிலில் இருந்தும் இறக்கி விடப்படுவார்கள். ரயில்களில் முறையான டிக்கெட் இல்லாமல் பயணிப்போருக்கு, பயணக் கட்டணத்துடன் கூடுதலாக விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகை ரூ.250-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைச் செலுத்தத் தவறினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பிறரது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்திப் பயணிப்போரின் டிக்கெட் பறிமுதல் செய்யப்படுவதோடு, ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். ரயில் நிலைய வளாகத்திலோ அல்லது ரயிலிலோ மது அருந்திவிட்டு சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மற்றும் ஆபாசமாகப் பேசுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

ரயில்கள் மற்றும் நிலையங்களில் முறையான அனுமதியின்றி வியாபாரம் செய்வோருக்கும், பிச்சை எடுப்போருக்கும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், மீண்டும் இதே குற்றத்தைச் செய்தால் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம்.
ரயில்வே துறையின் வருவாய் இழப்பைத் தடுப்பதற்கும், பயணிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தைக் பேணிக்காப்பதற்கும் இந்தச் கடுமையான விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பயணிகள் அனைவரும் விதிகளை முழுமையாகப் பின்பற்றிப் பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
