உஷார்.. .ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி ரூ.4.50 கோடி லீஸ் மோசடி... நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்!
சென்னை மாநகரையே ஒட்டுமொத்தமாக உலுக்கும் வகையிலான வீட்டு லீஸ் மோசடி விவகாரம் தற்போது அம்பலமாகி, சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக வெடித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா (28) என்ற இளம்பெண், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேளச்சேரி பகுதியில் தனது குடும்பத்துடன் தங்குவதற்காக லீசுக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது பிரபல 'OLX' இணையதளத்தில், வேளச்சேரியில் ஒரு சொகுசு வீடு வெறும் 7 லட்ச ரூபாய்க்கு லீசுக்குக் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய வெண்ணிலா, அதில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு நேரில் சென்று வீட்டைப் பார்வையிட்டுள்ளார்.

வீடு மிகவும் பிடித்துப் போகவே, அந்த வீட்டின் உரிமையாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அக்பர் ஷெரிப் என்பவரிடம் 7 லட்ச ரூபாயை ரொக்கமாகவும், ஆன்லைன் வழியாகவும் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அக்பர் ஷெரிப், "ஒரே வாரத்தில் வீட்டின் உள் வேலைகள் மற்றும் பெயிண்ட் அடித்து உங்களிடம் சாவியை ஒப்படைக்கிறேன்" என்று வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், பல வாரங்கள் கடந்தும் அவர் வீட்டையும் தரவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி இழுத்தடித்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெண்ணிலா, இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் அவசரப் புகார் அளித்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அங்கு வந்த இதர புகார்களை வைத்துப் பார்த்த போது தான் ஒட்டுமொத்த சென்னை போலீசையே அதிர வைக்கும் விபரீதம் வெளிச்சத்திற்கு வந்தது.
கைதேர்ந்த மோசடி ஆசாமியான அக்பர் ஷெரீப், ரவுடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து கும்பலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, வேளச்சேரியில் உள்ள அந்த ஒரே ஒரு வீட்டை காட்டி, 90க்கும் மேற்பட்ட நடுத்தர மக்களிடம், தனித்தனியாக லீஸ் அக்ரிமெண்ட் போட்டுச் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் 4.50 கோடி ரூபாய் வரை அவர் சுருட்டி மோசடி செய்திருப்பது அம்பலமானது.

இந்த லீஸ் மோசடி குறித்துப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வேளச்சேரி காவல் நிலையத்தில் தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்களை அளித்து வந்துள்ளனர். ஆனால், மோசடி மன்னன் அக்பர் ஷெரீப் கொடுத்த மாமூல் பணத்தைப் பெற்றுக் கொண்ட வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள், புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து கொண்டு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த அநீதியை வேடிக்கை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கோடி கோடியாகப் பணத்தைச் சுருட்டிய அந்த மோசடிக் கும்பல் தற்போது பள்ளிக்கரணையில் ஒரு பிரம்மாண்ட சொகுசு பங்களாவைக் கட்டி வருவதாகவும், ஊடகவியலாளர் ஒருவர் இந்த லீஸ் மோசடியில் சிக்கிப் பாதிக்கப்பட்ட பிறகே இந்த விவகாரம் தற்போது வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளதாகவும் மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்த 90-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சென்னை மாநகரக் காவல் ஆணையரை (கமிஷனர்) நேரில் சந்தித்துத் தங்களுக்கு நீதி கோரிக் கமிஷனர் அலுவலகத்திற்குத் திரண்டு சென்றனர். ஆனால், அங்கிருந்த ஒருசில அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களைக் காவல் ஆணையரைச் சந்திக்க விடாமல் திட்டமிட்டுக் கழுத்தைப் பிடித்துத் தடுத்துப் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பொதுமக்கள், தங்களுக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்து, வேளச்சேரி பிரதான சாலையில் நள்ளிரவில் திடீரென அமர்ந்து 'சாலைமறியல்' போராட்டத்தில் குதித்தனர். "லீஸ் விவகாரத்தில் 4.50 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளியில் உல்லாசமாக உலா வரும் மோசடிக் கும்பலை போலீசார் ஏன் இன்னும் கைது செய்யவில்லை? நாங்களும் இதேபோல் ஊரை ஏமாற்றி மோசடி செய்தால் சென்னை போலீஸ் அனுமதிக்குமா?" என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்கக் குமுறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
சாலையில் வாகனங்களை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் விடிய விடியப் போராட்டம் நடத்தியதால் அந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு போலீஸ் வாகனங்களுடன் விரைந்து வந்த உயர் அதிகாரிகள், மோசடிக் கும்பல் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த வேளச்சேரி இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
