உஷார்.. அதிர்ச்சி வீடியோ... வீட்டு லிப்ட்டில் தலை மாட்டிக்கொண்டு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழப்பு!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே, வீட்டின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சர்வீஸ் லிப்ட்டில் எதிர்பாராதவிதமாகத் தலை மாட்டிக்கொண்டதில் 75 வயது மாற்றுத்திறனாளி முதியவர் மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்தனம்திட்டா அடுத்த கடம்மனிட்டா கல்லேலிமுக்கு பகுதியைச் சேர்ந்தவர் மாத்துக்குட்டி (75). இவர் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மாற்றுத்திறனாளியான இவரால் வீட்டின் படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.
இவரது வீடு சாலையிலிருந்து சற்றே உயரமான மேட்டுப் பகுதியில் அமைந்திருந்ததால், காரை நிறுத்தும் இடத்தில் இருந்து வீட்டிற்கு எளிதாகச் சென்று வர ஏதுவாக, இரும்பு பைப் மற்றும் பீம்களைக் கொண்டு வீட்டின் வெளிப்புறத்தில் எளிய 'சர்வீஸ் லிப்ட்' போன்ற ஒரு தற்காலிக அமைப்பை அவர் சொந்தமாக நிறுவியிருந்தார்.
சம்பவத்தன்று பிற்பகலில் காரில் வீட்டிற்கு வந்த மாத்துக்குட்டி, வழக்கம் போல மேலே செல்வதற்காக அந்த லிப்ட்டில் ஏறியுள்ளார். லிப்ட் மேல்நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, திடீரென அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லிப்ட் பாதியிலேயே நின்றுள்ளது.
இதனால் என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக அவர் லிப்ட்டின் இரும்புத் தடுப்புகளுக்கு இடையே தனது தலையை வெளியே நீட்டியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக லிப்ட்டின் இரும்புச் சட்டங்களுக்கு இடையே அவரது தலை கொடூரமாக மாட்டிக்கொண்டது.
தலையை வெளியே எடுக்க முடியாமல் மாத்துக்குட்டி வலியால் போட்ட அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி, கணவரைக் காப்பாற்றக் கடுமையாகப் போராடினார். ஆனால், இரும்புச் சட்டங்களை அவரால் பிரிக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, இரும்புப் பைப் மற்றும் பீம்களை அதிநவீன 'கட்டர்' இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து மாத்துக்குட்டியை மீட்டனர். எனினும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் நீண்ட நேர நெரிசலால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், விபத்துக்குள்ளான அந்தத் தற்காலிக லிப்ட் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் அமைக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத தற்காலிக லிப்ட்டுகளைப் பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
