உஷார்... கோடை வெப்பம்; சின்னம்மை நோய் அதிகரிக்க வாய்ப்பு - சுகாதாரத் துறை எச்சரிக்கை!

 
சின்னம்மை அம்மை

தமிழகத்தில் கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 'சின்னம்மை' (Chickenpox) நோய் பரவும் அபாயம் குறித்து மாநிலச் சுகாதாரத் துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் காணப்படும் சின்னம்மை பாதிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே ஆங்காங்கே தொடங்க ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சின்னம்மை என்பது 'வேரிசெல்லா ஜோஸ்டர்' எனும் வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இதன் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கவனிப்பது அவசியம்: உடலில் ஆங்காங்கே நீர் கோர்த்தது போன்ற சிறிய கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்படுதல். லேசான அல்லது அதிகப்படியான காய்ச்சல் மற்றும் உடல் வலி. கடுமையான தலைவலி மற்றும் சோர்வு, பசியின்மை ஆகியவை அறிகுறிகளாகும். 

சின்னம்மை அம்மை

சின்னம்மைக்கான அறிகுறிகள் தெரிந்தால் சுயமாக மருந்து எடுப்பதைத் தவிர்த்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.உடல் வெப்பத்தைத் தணிக்க நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை (இளநீர், மோர், பழச்சாறுகள்) அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டுத் துப்புரவாகக் கழுவுதல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகளைத் தனியாகத் துவைப்பது நல்லது.

பாதிப்புக்குள்ளான குழந்தைகள் முழுமையாகக் குணமடையும் வரை அவர்களைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது. மேலும், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இது மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க உதவும்.

அதிகப்படியான வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் குறையும் போது இந்த வைரஸ் வேகமாகப் பரவும் தன்மையைப் பெறுகிறது. குறிப்பாகப் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களை இது எளிதில் தாக்குகிறது. சின்னம்மை வராமல் தடுக்க 'வேரிசெல்லா' தடுப்பூசி போடுவது மிகச் சிறந்த வழிமுறையாகும். இது குறித்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.