உஷார்... சட்டைப் பையில் இருந்த செல்போன் பேட்டரி வெடித்து இளைஞர் பலி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்துச் சிதறியதால், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த விகாஸ் என்ற இளைஞர், தனது தாயாரை மாமாவின் வீட்டில் விட்டுவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தனது சட்டையின் மேல் பையில் வைத்திருந்த செல்போனின் பேட்டரி திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

எதிர்பாராமல் நடந்த இந்த வெடி விபத்தினால் நிலைகுலைந்த விகாஸ், ஓடும் பைக்கிலிருந்து தடுமாறி சாலையில் பயங்கரமாகத் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்குத் தலையில் மிகக் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
