உஷார்... இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு... தேர்தல் விதிகள் உடனடி அமல்!

 
அர்ச்சனா அர்ச்சனா

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதனையொட்டி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்கள் பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ அல்லது ஊர்வலத்தையோ நடத்தவோ அதில் பங்கேற்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த விதிகளை யாராவது மீறினால் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

தமிழகம்

தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், முகநூல் போன்றவற்றின் மூலம் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொள்ளக்கூடாது. மேலும் தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத வெளி நபர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இதனை உறுதி செய்யத் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட உள்ளனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்குச் சொந்த பயன்பாட்டிற்காகத் தலா ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவதோ அல்லது கொண்டு விடுவதோ சட்டப்படி குற்றமாகும். வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு வெளியே 2 நபர்களை மட்டுமே கொண்டு தேர்தல் அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் இந்தக் கட்டுப்பாடுகள் இன்று மாலை முதல் தேர்தல் முடியும் வரை மாநிலம் முழுவதும் மிகத் தீவிரமாகப் பின்பற்றப்பட உள்ளன.