உஷார்... இன்று மாலை முதல் அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள்... எதற்கெல்லாம் கட்டுப்பாடு? எவ்வளவு பணம் கொண்டு செல்லலாம்?!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அறிவிப்பு வெளியான அடுத்த வினாடியே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிகள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஆளும் கட்சி தனது அதிகாரத்தைத் தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது: புதிய சாலைகள், குடிநீர் வசதி அல்லது எந்தவொரு புதிய நலத்திட்டங்களையும் அறிவிக்கவோ, அதற்கு அடிக்கல் நாட்டவோ முடியாது.
அரசின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களின் வரிப்பணத்தில் (நாளிதழ், டிவி, பேனர்கள்) விளம்பரம் செய்யக் கூடாது. ஏற்கனவே உள்ள அரசு விளம்பரங்கள் மற்றும் தலைவர்களின் படங்கள் உடனடியாக அகற்றப்படும். தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட எந்தவொரு அரசு அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய முடியாது.

அமைச்சர்கள் தங்களது அரசு வாகனங்களை அல்லது அரசு இயந்திரங்களை தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. அரசு நடத்தும் விழாக்களில் அமைச்சர்கள் பங்கேற்கலாம், ஆனால் அங்குத் தேர்தல் பிரசாரம் செய்யவோ, அரசியல் பேசவோ அனுமதி இல்லை. அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணங்களுடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது.
மற்ற கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களின் கொள்கைகள், கடந்த கால சாதனைகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும். தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்யக் கூடாது. கோயில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தலங்களைத் தேர்தல் பிரசாரத்திற்காகவோ அல்லது வாக்கு சேகரிக்கவோ பயன்படுத்தக் கூடாது. சாதி அல்லது மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்த விரும்புவோர், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் (மாவட்ட ஆட்சியர்) முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது.
வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவது சட்டப்படி குற்றம். இதைக் கண்காணிக்கப் பறக்கும் படைகள் இன்று மாலை முதல் தீவிரமாகச் செயல்படும். அனுமதியின்றிச் சுவர்களில் விளம்பரம் செய்வது, பேனர்கள் வைப்பது தடை செய்யப்படும்.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகள் மற்றும் அவதூறுகளைத் தேர்தல் ஆணையத்தின் 'சி-விஜில்' செயலி மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம். அரசியல் கட்சிகளுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் சில முக்கியமான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அமலுக்கு வருகின்றன.
பொது இடங்களில் அல்லது வாகனங்களில் செல்லும்போது, தகுந்த ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லக் கூடாது. பெரிய தொகையைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால் (எ.கா: மருத்துவச் செலவு, தொழில் நிமித்தமாக), அதற்கான வங்கி ரசீது அல்லது முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
ரூ.10,000-க்கு மேல் மதிப்புள்ள புதிய பொருட்கள் அல்லது பரிசுப் பொருட்களை (எ.கா: சேலைகள், குக்கர்கள், வேட்டிகள்) மொத்தமாக வாகனங்களில் கொண்டு சென்றால், அவை பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற தளங்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் குறித்து அவதூறு பரப்பும் செய்திகளையோ, மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் தகவல்களையோ பகிரக் கூடாது. உண்மைத்தன்மை இல்லாத தேர்தல் செய்திகளைப் பகிர்வது சட்டப்படி குற்றமாகும். இதைக் கண்காணிக்கச் சைபர் கிரைம் பிரிவு தீவிரமாகச் செயல்படும்.

யாரேனும் ஒரு தலைவரின் குரலையோ அல்லது உருவத்தையோ தவறாகச் சித்தரிக்கும் AI வீடியோக்களைப் பரப்புவது கடும் தண்டனைக்குரியது.
உங்கள் வீட்டுச் சுவரிலோ அல்லது தனியார் இடத்திலோ அரசியல் கட்சியினர் பேனர் வைக்கவோ, சுவர் விளம்பரம் செய்யவோ நீங்கள் அனுமதி அளித்திருக்க வேண்டும். உங்கள் அனுமதியின்றிச் செய்யப்பட்டால் நீங்கள் புகார் அளிக்கலாம். வீடுகளுக்கு முன்பு அரசியல் கட்சிகள் தர்ணா செய்வதோ அல்லது தனிநபர் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படுவதோ தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்களைக் கண்டால் (எ.கா: பணம் விநியோகம், மது விநியோகம், அனுமதியின்றி பேனர்), cVIGIL என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து உடனடியாகப் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஆங்காங்கே வாகனச் சோதனையில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
