உஷார்.. பியூட்டிஷியன் வீட்டில் திருட்டு.. பக்கத்து வீட்டில் வசித்து வந்த தாய், மகள் கைது!

 
திருட்டு

சென்னை திருவொற்றியூரில் அழகு நிலைய உரிமையாளரின் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த தாய் மற்றும் மகளைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்தவர் ரேவதி (33). இவர் அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பீரோவைப் பார்த்த போது, அதில் வைத்திருந்த ரூ.1,20,000 ரொக்கம் மற்றும் அரை சவரன் தங்க மோதிரம் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இத்திருட்டு சம்பவம் குறித்து ரேவதி உடனடியாகத் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ரேவதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுகன்யா (32) மற்றும் அவரது தாயார் சாந்தி (55) ஆகியோர் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. ரேவதியுடன் நட்பாகப் பழகி அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற இவர்கள், கடந்த மாதம் வீட்டின் பீரோவில் இருந்த பணம் மற்றும் நகையைத் திட்டமிட்டுத் திருடியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் மீதமிருந்த ரூ.42,500 ரொக்கத்தைக் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.