உஷார்.. இன்று மாலை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பரவலாகக் கோடை மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய செயற்கைக்கோள் தரவுகளின்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு , சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் மாலை நேரத்திற்குப் பின் மழைப்பொழிவு தீவிரமடையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் சமயங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தற்காலிகப் பலத்த காற்று வீசக்கூடும். இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் இருக்குமாறும், மின்சாரக் கம்பங்கள் மற்றும் மரங்களின் அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
