உஷார்.. போலி இணையதளங்களை நம்பி ஏமாறாதீங்க - திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!
திருமலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய மற்றும் தங்குமிடம் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள், போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்றே போலி தோற்றத்துடன் ttddevasthanam.online என்ற போலி இணையதளம் உருவாக்கப்பட்டு பக்தர்களிடம் இருந்து பணம் பறிக்க முயற்சிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடியைத் தேவஸ்தானத்தின் பாதுகாப்புக் படையினர் மற்றும் சைபர் குற்றப்பிரிவினர் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

பக்தர்கள் தங்களது தரிசன டிக்கெட்டுகள், தங்குமிடம் மற்றும் சேவை முன்பதிவுகளை மேற்கொள்ளத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ செல்போன் செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், முன்பதிவு செய்வதற்கு முன் தளத்தின் முகவரியைச் சரிபார்த்துக் கொள்ளுமாறும் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
