உஷார்... கலப்பட பெட்ரோலால் நடுரோட்டில் ஆங்காங்கே நின்ற வாகனங்கள்.. பங்க்கை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!

 
கலப்பட பெட்ரோல் கலப்பட பெட்ரோல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்பட பெட்ரோல் நிரப்பியதால் வாகனங்கள் ஆங்காங்கே உடனுக்குடன் நின்றது இருசக்கர வாகன ஓட்டிகளைப் பெரும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தியது. அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று காலை வழக்கம்போல் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்பியுள்ளனர்.

ஆனால், அந்தப் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிவிட்டுச் சாலையின் வெளியில் வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, பல இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே திடீரென என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றன. எவ்வளவு உதைத்தும் வண்டிகள் ஸ்டார்ட் ஆகாததால் குழப்பமடைந்த வாகன ஓட்டிகள், தங்களது வண்டியின் பெட்ரோல் டேங்க்கைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர். பெட்ரோலில் அதிகளவில் தண்ணீரோ அல்லது வேறு ஏதேனும் மலிவான ரசாயனங்களோ கலக்கப்பட்டிருப்பதை அவர்கள் நேரடியாகக் கண்டுபிடித்தனர்.

பாகிஸ்தான் பெட்ரோல்

இதனால் கடும் கோபமடைந்த வண்டியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மொத்தமாகத் திரண்டு, சம்பந்தப்பட்ட அந்தப் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தங்களது வண்டிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்டஈடு கேட்டும், கலப்படம் குறித்து முறையான விளக்கம் அளிக்குமாறும் அங்கிருந்த ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மானாமதுரை பகுதி போலீசார் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், கலப்படம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெட்ரோல் தொட்டியில் இருந்து எரிபொருள் மாதிரிகளை அதிகாரிகள் கைப்பற்றி, ரசாயன ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆய்வின் இறுதி முடிவு வந்தவுடன், நுகர்வோரை ஏமாற்றிய அந்தப் பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.