“வறுமையைக் கடந்து...” பிக் பாஸ் வீட்டில் கதறியழுத முனியம்மா - உணவு கொடுத்து உதவிய அக்‌ஷிதா!

 
பிக் பாஸ் முனியம்மா அக்‌ஷிதா

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் பிரிவில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள முனியம்மா, நீண்ட நேரப் பசிக்குப் பிறகு உணவு கிடைத்ததும் கடந்த கால வறுமையை நினைத்து அழுதுள்ள சம்பவம் பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தற்போது 5-வது வாரத்தை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 10  நிகழ்ச்சியில், இந்த வாரத்தின் ஆளும் அணி தலைவராக அக்‌ஷிதாவும், எதிரணி தலைவராக முனியம்மாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த வாரம் இரண்டு பேர் கொண்ட அணிகளாகப் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணிக்கும் 10 உயிர்கள் வழங்கப்பட்டு, இறுதி வரை பாதுகாக்கும் போட்டி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் முனியம்மா

இப்போட்டியில் முனியம்மாவும் முத்தழகியும் இணைந்து விளையாடினர். நீண்ட நேரம் விளையாடியதால் கடுமையான பசியில் இருந்த முனியம்மாவின் கைகள் நடுங்கத் தொடங்கியுள்ளன. உடனே அங்கிருந்த தக்காளியை எடுத்துச் சாப்பிட முற்பட்டபோது, அது விதிமீறல் என்பதால் முத்தழகி அவரைத் தடுத்தார். இதைக் கவனித்த எதிரணியின் தலைவரான அக்‌ஷிதா, தாமதிக்காமல் முனியம்மாவிடம் சென்று உணவு கொடுத்து உதவினார்.

உணவை வாங்கிச் சாப்பிடத் தொடங்கிய முனியம்மா, திடீரெனக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். இதனைக் கண்ட அக்‌ஷிதா அவரைச் சமாதானப்படுத்தி விசாரித்தபோது தனது கடந்த காலக் கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பள்ளிப் பருவத்தில் பல நாள்கள் உணவின்றிப் பசியுடன் இருந்ததாகவும், விடுதியிலும் தனக்குச் சரியாக உணவு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். பசியைத் தாங்க முடியாமல் விடுதியை விட்டு ஓடிவந்த தன்னை, தந்தை கடுமையாகத் தாக்கி மீண்டும் அதே விடுதிக்கு அனுப்பியதாகவும், ஆனால் தன் பசியின் வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் முனியம்மா கண்ணீருடன் தெரிவித்தார்.

பிக்பாஸ்  10

பசியில் இருக்கும் போது உணவு தருபவர்கள் தெய்வத்திற்குச் சமம் எனக் கூறிய அவர், மனதார நன்றி தெரிவித்து அக்‌ஷிதாவை நோக்கி கைகூப்பி வணங்கினார்.

தன் கணவரைத் திருமணம் செய்த பிறகே தனக்கு உணவுக் கவலை நீங்கியதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது வாழ்க்கை எப்படி மாறப் போகிறதோ என்ற கலக்கத்துடன் அவர் அழுது கொண்டே உணவு உண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.