பகவான் யோகி ராம்சுரத்குமார் நாமகேந்திரம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமார் நாமகேந்திரம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள யோகி ராம்சுரத்குமார் நாமகேந்திரத்தில், அருள்மிகு ஸ்ரீ விசிறி விநாயகர் மற்றும் பகவான் யோகி ராம்சுரத்குமார் நூதன விக்ரஹ அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதன்படி, இன்று காலை 7 மணி அளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய விழாவில் பிம்ப சுத்தி, பிம்ப ரக்ஷா பந்தனம், மூல மந்திர ஹோமம், ஸ்பரிஷா ஹுதி, யாத்ரா தானம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து காலை 9 மணி அளவில் யாகசாலையில் இருந்து மேளதாளங்களுடன் கடம் புறப்பட்டு ஆலயத்தில் விமான கலசங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் அருள்மிகு ஸ்ரீவிசிறி விநாயகர் மற்றும் பகவான் யோகி ராம் சுரத்குமாருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பால், தேன், இளநீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள், தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
