குலாப் ஜாமூன் பாத்திரத்துக்குள் எலி! வைரல் வீடியோவால் அதிர்ச்சி

 
எலி

 

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் உள்ள இனிப்பகத்தில், குலாப் ஜாமூன் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்துக்குள் எலி இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இனிப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

பிவாண்டி ஷாந்தி நகர் சாலையில் செயல்பட்டு வரும் ஹரிஷ் குலாப் ஜாமூன் என்ற இனிப்பகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், குலாப் ஜாமூன் நிரப்பப்பட்டிருந்த பெரிய பாத்திரத்துக்குள் எலி ஒன்று நீந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சியால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து FDA அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு நடத்தினர். அப்போது உணவு வணிகத்தை நடத்துவதற்குத் தேவையான பதிவு சான்றிதழ் இல்லை என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த இனிப்பகத்தின் உணவு வணிகத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

மேலும், கடையில் இருந்த குலாப் ஜாமூன் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆய்வு முடிவுகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வைரல் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, பாத்திரத்துக்குள் எலி எவ்வாறு சென்றது என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. கடையின் உரிமையாளரும் வீடியோ தொடர்பான உண்மை நிலையை சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஆய்வக முடிவு மற்றும் அதிகாரிகளின் விசாரணை முடியும் வரை வீடியோவில் காணப்படும் சம்பவத்தை உறுதி செய்யப்பட்ட உண்மையாக கருத முடியாது.