கோவில்பட்டியில் கோர விபத்து.. கோவிலுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள துரைசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 சிறுவர்கள் உட்பட 30 பேர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வேனில் சென்றுள்ளனர். வேனை சிவகாசி வடக்குத்தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் செல்வக்குமார் என்பவர் ஓட்டிவந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் நெடுஞ்சாலையில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்த போது வேகத்தடை இருப்பதை அறியாமல் வேகமாக வந்த வேன் தூக்கி வீசப்பட்டு ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (58) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர்கள், காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த 3 நபர்களை மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பஞ்சவர்ணத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்துக் குறித்து கோவில்பட்டி கோவில் கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
