சென்னையில் BBL கிரிக்கெட் திருவிழா! ₹1,500 முதல் டிக்கெட்… ஆன்லைனில் வாங்குவது எப்படி?

 
சென்னை

ஆஸ்திரேலியாவின் பிரபலமான பிக்பாஷ் லீக் (BBL) டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்தப் போட்டி டிசம்பர் 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவில் பிக்பாஷ் லீக் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறை. தொடக்க ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதனால், சென்னையில் நடைபெற உள்ள இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

போட்டிக்கான டிக்கெட் விலைகள் ₹1,500 முதல் ₹6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எஃப் கீழ்தள இருக்கைகளுக்கு ₹1,500, ஐ, ஜே, கே கீழ்தள இருக்கைகளுக்கு ₹2,500, அதே பிரிவுகளின் மேல்தள இருக்கைகளுக்கு ₹2,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேஎம்கே மாடம் இருக்கைகளுக்கு ₹3,500, குளிரூட்டப்பட்ட சி விருந்தினர் அறைகளுக்கு ஒரு இருக்கைக்கு ₹6,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும். District by Zomato செயலி அல்லது district.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு வெளியே பிக்பாஷ் லீக் தொடரின் வழக்கமான சீசன் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை நேரில் காண விரும்பும் ரசிகர்கள், டிக்கெட் விலை மற்றும் இருக்கை விவரங்களை அதிகாரப்பூர்வ டிக்கெட் தளத்தில் சரிபார்த்து முன்பதிவு செய்யலாம்.