BIG BREAKING: தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 3,878 இடங்கள் ஒதுக்கீடு!
தமிழகத்தில் பி.எஸ்சி நர்சிங் உட்பட துணை மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 3,878 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் புதிய செவிலியர் கல்லூரிகள் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கூடுதல் இடங்கள் தொடங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், புதிய நர்சிங் கல்லூரிகள் அமைப்பதற்கும் கூடுதல் சேர்க்கை இடங்களை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டன.

நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய 8 மையங்களில் புதிய செவிலியர் படிப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் 660 இடங்களும், ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு செவிலியர் கல்லூரிகளில் கூடுதலாக 440 இடங்களும் என மொத்தம் 1,100 பி.எஸ்சி நர்சிங் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நர்சிங் படிப்புகளுக்கான 1,100 இடங்களுடன் சேர்த்து, பிற துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு என மொத்தம் 3,878 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள இந்த 3,878 இடங்களும் தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுச் சேர்க்கை இடங்களாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. அரசு அளித்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதால், துணை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்புவோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் எதிர்காலத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அமைச்சர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
