BIG BREAKING: நாடு முழுவதும் உடனடி அமல்... 90 நாட்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... பெட்ரோல் பங்குகளில் மொத்த விற்பனைக்கு தடை... நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் மட்டுமே அனுமதி!
மேற்காசிய பிராந்தியத்தில் நீடித்து வரும் கடுமையான போர் பதற்றங்களின் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்புகளும் முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நோக்கில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவின்படி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் பெரு நிறுவனங்களுக்குப் பெட்ரோல் பங்குகள் மூலமாக ஒட்டுமொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வதற்கு 90 நாட்களுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான எரிபொருட்களை நிறுவனங்கள் நேரடியாக எண்ணெய் நிறுவனங்களின் விநியோக மையங்கள் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களுக்குத் தங்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மற்றொரு முக்கியக் கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் பங்குகளில் பெரிய ரகச் சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட வாகனத்திற்கும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என விநியோகஸ்தர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேசச் சூழலால் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிகக் கட்டுப்பாடுகள், உள்நாட்டுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் பொதுமக்களுக்கான சில்லறை விற்பனையை முறைப்படுத்த உதவும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
