#BIG BREAKING: டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட்!
பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக ரஷ்ய அரசு சர்வதேசக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், டெலிகிராம் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாகியுமான பாவெல் துரோவ் மீது ரஷ்ய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலி மூலம் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வழிவகுத்ததாகவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ரஷ்ய நீதிமன்றம் அவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து, இன்டர்போல் அமைப்பு உட்படப் பல்வேறு சர்வதேச வழிகளில் அவரை ரஷியாவுக்கு நாடு கடத்தக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதால், இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக ரஷிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 15 கோடிக்கும் அதிகமான பயனாளர்களையும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களையும் கொண்டுள்ள டெலிகிராம் செயலியின் நிறுவனர் மீது ரஷியா சர்வதேசக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ள இச்சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
