BIG BREAKING: கேரளா வயநாட்டில் திடீர் நிலச்சரிவு.. பலர் சிக்கியுள்ளதாக தகவல்!
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர்.
வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இது குறித்துக் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இப்பகுதியில் மிக அதிகளவாக 265 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாகக் கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
A landslide at the Kalladi tunnel work site in #Wayanad blocked the road and injured 5 people. They have been taken to the hospital. No deaths have been reported. Work at the site had already been stopped because of heavy rain. The area received 265 mm of rain in the last 24… pic.twitter.com/3LrpPhR0gM
— Ashish (@KP_Aashish) July 7, 2026
பணிகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், விடாது பெய்த மழையினால் கட்டுமானப் பணியிடத்தில் இருந்த மண் மற்றும் பெரிய பாறை இடிபாடுகள் திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்ட உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்பொழுது இடிபாடுகளில் இருந்து ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மண்ணுக்குள் மேலும் யாரேனும் புதைந்துள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்கில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் தற்காலிகமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
