விரைவில் பெரிய மாற்றம்... தவெக அமைச்சரவையில் களையெடுப்பு.. கலக்கத்தில் ‘ரீல்ஸ் புகழ்’ அமைச்சர்!
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் வேளையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த கையோடு அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நிர்வாகத் திறனையும், வெளிப்படைத்தன்மையையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதலமைச்சர் விஜய், "தவறுகளுக்கோ அல்லது மெத்தனப் போக்கிற்கோ அமைச்சரவையில் இடமில்லை; தவறு செய்தால் உடனடியாகப் பதவி பறிக்கப்படும்" என்று ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்திலேயே மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். அந்த எச்சரிக்கையின் தொடர்ச்சியாகவே இந்த மாற்றங்கள் அரங்கேற உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ போடுவதற்காகவே செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வீடியோகிராஃபரையும், அபிமானிகளையும் அழைத்து சென்று செல்போனிலும் வீடியோ எடுத்து பதிவிடும் அமைச்சருக்கு இம்முறை கல்தா கொடுக்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கசிகின்றன.

100 கோடி பத்திரப்பதிவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அவரும் மாற்றப்படலாம் என்கிறார்கள் பனையூர் அன்பர்கள். கண்காணிப்புத் துறை மற்றும் உளவுத்துறை அளித்த ரகசிய அறிக்கைகளின் அடிப்படையில், மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெறத் தவறிய மற்றும் துறை ரீதியான செயல்பாடுகளில் தொய்வைக் காட்டிய அமைச்சர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய முதற்கட்டத் தகவல்களின்படி, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் முக்கிய அமைச்சர்களான கீர்த்தனா, பர்வேஸ், கமலி உள்ளிட்ட 5 பேரின் பெயர்கள் முதன்மையாக இடம் பெற்றுள்ளதாகப் பரவும் செய்திகள் தவெக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் விமர்சகர்கள் மற்றும் கட்சி உள்வட்டாரங்களின் கூற்றுப்படி, இந்த அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னால் இரு முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய அரசாகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், இன்னும் சில அமைச்சர்கள் தங்களின் துறைகளை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வராததும், அதிகாரிகள் மத்தியில் நிலவும் சில நிர்வாக முரண்பாடுகளும் முதலமைச்சருக்குத் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பகால விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து உழைத்த தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கட்சித் தலைமைக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால், தற்போதைய அமைச்சர்களை நீக்கிவிட்டு, தீவிரமாக உழைத்த புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் அதிகாரப்பூர்வமாக அரங்கேறவிருக்கும் இந்த புதிய அமைச்சரவை மாற்றம், தவெக அரசின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை நோக்கிய மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
