BIG NEWS: பெரிய டெபாசிட்டுகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வங்கிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி புதிய அனுமதி!
வங்கிகளில் ரூ.3 கோடிக்கும் அதிகமான பெரிய தொகை டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் வங்கிகளுக்குக் கூடுதல் சுதந்திரம் வழங்கி இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பெரிய தொகை டெபாசிட்டுகளை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வங்கியின் பணப்புழக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வெவ்வேறு அளவிலான பெரிய டெபாசிட்டுகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வங்கிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஒரே நாளில் ஒரே அளவிலான தொகையை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள் அல்லது வங்கிக் கிளைகளுக்கு இடையே வட்டி விகிதத்தில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது. ஒரே அளவிலான தொகைக்கு ஒரே சீரான வட்டி விகிதமே வழங்கப்பட வேண்டும்.

பெரிய தொகை டெபாசிட்டுகள் உட்பட அனைத்து வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களையும் வங்கிகள் முன்கூட்டியே தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கட்டாயம் வெளியிட வேண்டும்.
பெரிய தொகை டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித விவரங்களை ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10 மணிக்கு வங்கிகள் வெளியிட வேண்டும். மேலும், இதைக் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கலாம். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் வருகிற அக்டோபர் 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
