#BIG NEWS :121 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. கொலம்பியாவில் கொடூரம்!
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற ஹெர்குலஸ் ரக விமானம் அமேசான் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமாத்தில் 110 ராணுவ வீரர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொலம்பிய ராணுவத்திற்குச் சொந்தமான 'லாக்கீட் மார்டின் ஹெர்குல்ஸ் சி-130' (Lockheed Martin Hercules C-130) ரக விமானம், அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பெரு நாட்டு எல்லை அருகே பறந்து கொண்டிருந்தது. புவேர்ட்டோ லெகுய்சாமோ பகுதியிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து அமேசான் அடர் வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
விமானம் விழுந்த அமேசான் பகுதி மிகவும் அடர்த்தியான காடு என்பதால், மீட்புப் படையினர் அங்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தவுடன் விமானம் தீப்பற்றி எரிந்ததால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதுவரை 90 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும் விமானத்தில் பயணம் செய்த 110 வீரர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து கொலம்பியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமானத்தில் 110 வீரர்கள் இருந்தனர். விபத்து நடந்த இடத்தை மீட்புப் படையினர் அடைந்துள்ளனர்" என்று உறுதிப்படுத்தியுள்ளது. கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இந்த விபத்து குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, "அமேசான் காட்டில் சிக்கியுள்ள வீரர்களை மீட்க அனைத்துப் பாதுகாப்புத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
VIDEO SHOWS COLOMBIAN AIR FORCE PLANE LOSING ALTITUDE 🇨🇴🚨
— La Verità Globale (@LaVeritaGlobale) March 23, 2026
Footage appears to show a Colombian Air Force aircraft losing altitude moments before crashing. Reports indicate around 100 people were on board. Authorities have not yet confirmed casualties as investigations begin. pic.twitter.com/3O7r0YYFs6
விபத்துக்குள்ளான ஹெர்குலஸ் சி-130 ரக விமானங்கள் 1960-ஆம் ஆண்டு முதல் கொலம்பிய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன. மிகவும் பழமையான இந்த ரக விமானங்களைப் பராமரிப்பதில் உள்ள குறைபாடுகளே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியாகும் காட்சிகள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளன.

தற்போது அமேசான் வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
