BIG NEWS: அதிகாரப்பூர்வ அறிவிப்பு... நீட் தேர்வுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள், வினாத்தாள் வடிவமைப்பிலும் மாற்றம்... தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

 
நீட் நீட்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட்  நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டுத் தேர்வில் மிக முக்கியமான மாற்றத்தை தேசிய தேர்வு முகமை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டு, தற்போது வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

கடந்த காலங்களில் நீட் தேர்வு 3 மணி நேரம் (180 நிமிடங்கள்) மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 15 நிமிடங்களையும் சேர்த்து, ஒட்டுமொத்த தேர்வு நேரம் 3 மணி நேரம் 15 நிமிடங்களாக (195 நிமிடங்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வு, பிற்பகல் 2:00 மணிக்குத் தொடங்கி மாலை 5:15 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் மாணவர்கள் நுழைந்த பிறகு, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுதல், சரிபார்ப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றுக்கே கணிசமான நேரம் விரயமாகிவிடுவதாக மாணவர்கள் தரப்பிலிருந்து தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்த நிர்வாக நடைமுறைகளால் மாணவர்களின் அசல் தேர்வு எழுதும் நேரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த கூடுதல் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எவ்வித பதற்றமும் இன்றி, வினாத்தாளைப் படித்துப் பார்த்துச் சிறப்பாகக் கையாள முடியும் என்று என்.டி.ஏ தெரிவித்துள்ளது. கூடுதல் நேரம் தவிர, நடப்பாண்டுத் தேர்வில் மேலும் சில வசதிகளையும் என்.டி.ஏ அறிமுகப்படுத்தியுள்ளது.

நீட் நுழைவுத்  தேர்வு

வினாத்தாள் புத்தகத்தில் கணக்கீடுகளைச் செய்து பார்க்க இதுவரை 2 பக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 4 பக்கங்கள் வழங்கப்படும். வினாத்தாள் புத்தகத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டு, முதல் பக்கத்தின் அறிவுரைகளுக்கு அடுத்தே 2 ரஃப் தாள்களும், இறுதிப் பக்கத்தில் 2 ரஃப் தாள்களும் வைக்கப்பட்டுள்ளன. இது இடதுகை பழக்கம் உடைய மாணவர்கள் எளிதாகப் பயன்படுத்த உதவும்.

மறுதேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வரும் ஜூன் 14 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, இம்முறை இந்திய விமானப்படை உதவியுடன் வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும், தேர்வு மையங்களில் மும்முனைப் பாதுகாப்பு மற்றும் பயோமெட்ரிக் சோதனைகளை நடத்தவும் மத்திய அரசு மிகக் கடுமையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.