பிக் பாஸ் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் பரபரப்பு குற்றச்சாட்டு! “திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்” - வைரல் வீடியோ

 
பிக்பாஸ்

 

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வஹிதா பேகம் என்ற பெண் சமூக வலைதளத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவும், அதுதொடர்பான பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வஹிதா பேகம் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், தன்னுடன் முத்துக்குமரன் நெருக்கமாக பழகியதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இருவருக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்ததாகவும் அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.

மேலும், இந்த வீடியோவை வெளியிட்ட பின்னர் வஹிதா தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் தப்பியதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது அவர் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, வஹிதா வெளியிட்டதாக கூறப்படும் மற்றொரு வீடியோவில் முத்துக்குமரனுடன் அவர் இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.இந்த விவகாரம் தொடர்பாக முத்துக்குமரன் தரப்பிலும் விளக்கம் வெளியாகியுள்ளது. தானும் வஹிதாவும் நல்ல நண்பர்கள் என்றும், அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும், இதுகுறித்து விளக்கம் கேட்டு வருவதாகவும் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இதனால், முத்துக்குமரன் மீது வஹிதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது கூடுதல் தகவல்கள் வெளியாகும் வரை, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உறுதி செய்யப்பட்ட உண்மையாக எடுத்துக்கொள்ள முடியாது.