சோகம்... குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி! மீட்கச் சென்றபோது பரிதாபம்!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற 6 சிறுவர்-சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகல்பூர் மாவட்டம் சுல்தான்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தரைதா பகியார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்-சிறுமியர் அருகில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது ஒருவர் ஆழமான பகுதிக்குள் சென்று நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த மற்ற குழந்தைகள் அவரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்களும் ஆழமான நீரில் சிக்கியதால், 3 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தம் 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
குளிக்கச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குளத்திற்கு சென்று பார்த்தபோது குழந்தைகள் நீரில் மூழ்கியிருப்பது தெரியவந்தது.தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 6 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் பூஜா குமாரி, ராகுல் குமார், விகாஷ் குமார், ஆயுஷ் குமார், மீனாட்சி குமாரி மற்றும் ஜோதி குமாரி ஆகியோர் அடங்குவர். இவர்களின் வயது 12 முதல் 14 வயதுக்குள் இருப்பதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு அரசு விதிகளின்படி தேவையான உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
