பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா... அமைச்சரவை கலைப்பு.. .சாம்ராட் சௌத்ரி போட்டியின்றி தேர்வு... வைரலாகும் வீடியோ!

 
சாம்ராட் சௌத்ரி பீகார் சாம்ராட் சௌத்ரி பீகார்

இந்திய அரசியலில் 'பல்டி' அடிப்பதில் கைதேர்ந்தவர் என்று பெயரெடுத்த நிதிஷ்குமார், மீண்டும் ஒரு அதிரடி முடிவை எடுத்து ஒட்டுமொத்த தேசத்தையும் பீகார் பக்கம் திரும்ப வைத்துள்ளார். பீகார் முதல்வர் பதவியை இன்று (ஏப்ரல் 14, 2026) அதிரடியாக ராஜினாமா செய்துள்ள அவர், தனது அமைச்சரவையையும் கலைத்துள்ளார்.

கடந்த 2025 நவம்பர் மாதம் பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (JDU) மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 201 இடங்களில் இமாலய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட நிலையில், "ஒரு மாநில முதல்வர் ஏன் எம்.பி-யாக வேண்டும்?" என்ற விவாதம் தேசிய அளவில் கிளம்பியது.

இன்று பாட்னாவில் அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய நிதிஷ்குமார், அமைச்சரவையைக் கலைக்கப் பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து, ராஜ்பவனுக்குச் சென்ற அவர், ஆளுநர் சையத் அட் ஹஸ்னைனைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

2020 முதல் பீகார் முதல்வராகத் தொடர்ந்து பணியாற்றி வரும் நிதிஷ்குமார், இனிவரும் காலங்களில் டெல்லியில் முகாமிட்டு தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மத்திய அமைச்சரவையில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்ராட்

நிதிஷ்குமார் விலகியதைத் தொடர்ந்து, பீகாரின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் இரண்டு பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. தற்போது பீகார் அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் பாஜக-வைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரிக்கு முதல்வர் நாற்காலி வழங்கப்படலாம். அரசியலில் இருந்து இதுவரை ஒதுங்கியிருந்த நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமாரை வாரிசு அரசியலாக முதல்வர் பதவியில் அமர்த்த நிதிஷ் காய்களை நகர்த்தலாம் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.

பீகாரில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்கள், வரவிருக்கும் தேசிய அளவிலான அரசியல் நகர்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. நிதிஷ்குமாரின் இந்த விலகல், பீகார் அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவாகவும், புதிய கூட்டணியின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. சாம்ராட் செளத்ரி முதல்வராவதற்கு எதிர்ப்புகள் இல்லையென்றும், ஏகமனதாக போட்டியின்றி அவரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.