ஓடும் ரெயிலில் பயணிகளை தள்ளி கொலை! போலி போலீசாக நடித்த ‘சைக்கோ கில்லர்’ கைது - பீகாரில் அதிர்ச்சி
பீகாரில் ஓடும் ரெயிலில் பயணிகளை குறிவைத்து பணம் பறித்ததாகவும், பணம் தர மறுத்தவர்களை ரெயிலில் இருந்து தள்ளியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட நபரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.போஜ்பூர் மாவட்டம் பரிஸ்வான் கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் திவாரி (25) என்பவரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ், ரெயில்வே பாதுகாப்புப் படை அல்லது சிறப்பு அதிரடிப்படை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து, ரெயில்களில் பயணிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து பணம் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் பரிசோதனை அல்லது ரெயிலில் புகைபிடித்ததற்கான அபராதம் எனக்கூறி பயணிகளிடம் பணம் கேட்டதாகவும், பணம் கொடுக்க மறுத்தவர்களை மிரட்டி தாக்கியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் பயணிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளம் பயணிகளை அவர் குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 19-ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து பீகாருக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்த நிதின் குமார் (21) என்பவரை ரோஹித் திவாரி கடத்தி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிதினின் குடும்பத்தினரிடம் ரூ.10,000 பணம் கேட்டதாகவும், பணம் கிடைக்காததால் அவரது கை, கால்களை கட்டி ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தள்ளியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். நிதின் உயிரிழந்தார்.
இதற்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 6-ம் தேதி கைலாஷ் குமார் என்ற பயணி ஓடும் ரெயிலில் இருந்து தள்ளப்பட்டு உயிரிழந்ததாகவும், அவருடன் பயணித்த மற்றொருவரும் தள்ளப்பட்டு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. உயிர் தப்பிய நபர் அளித்த தகவல்கள் விசாரணையில் முக்கிய ஆதாரமாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் மனித உளவுத்தகவல் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். பீகார்-உத்தரபிரதேச எல்லைப் பகுதியில் உள்ள மோகன்சராய் அருகே ரோஹித் திவாரியை போலீசார் கைது செய்தனர்.
மேலும், ரோஹித் திவாரி மீது ஏற்கெனவே ரெயில்வே தொடர்பான வழக்குகள் இருந்ததாகவும், சுமார் 25 மாதங்கள் சிறையில் இருந்த அவர் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து உயிரிழந்த கைலாஷ் குமாரின் அடையாள அட்டைகள் மற்றும் பர்ஸ் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் விரைவான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
