பீகாரில் பயங்கரம்! இரு தரப்பினர் மோதலில் 3 பேர் கொலை!
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரண் மாவட்டம் ஏக்மா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பர்சா கிராமத்தில் சனிக்கிழமை இரவு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது இருதரப்பினரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த மோதலில் முகேஷ் யாதவ், ரவீஷ் யாதவ் மற்றும் அன்கு குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், விவேக் குமார் என்பவர் படுகாயமடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுவரை 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலுக்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அந்த பகுதியில் ஆதிக்கம் தொடர்பான பிரச்சினையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த தகவல் போலீசாரால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் மோதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
