பட்டாசு தயாரிப்பு வீட்டில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி, 2 பேர் மாயம்!
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் பட்டாசுகள் தயாரித்து சேமித்து வைத்திருந்த வீட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மாயமாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அலம்பூர் கிராமத்தில் உள்ள அந்த வீட்டில் பட்டாசுகள் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சாலையில் விழுந்தது. தொடர்ந்து வெடிப்புகள் ஏற்பட்டதால் மீட்புப் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு மக்கள் விலகியிருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பட்டாசு தயாரிப்பதற்கான உரிமம் மற்றும் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. சம்பவத்தில் அலட்சியம் காட்டியதாகக் கூறி காவல் நிலையப் பொறுப்பாளர் உள்ளிட்ட 2 காவல்துறைப் பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.
