பள்ளி சத்துணவில் கிடந்த பாம்பு... 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... பீகாரில் பரபரப்பு!
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பாம்பு ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக உணவைப் பரிமாறுவதை நிறுத்தியது. இருப்பினும் அதற்கு முன்பே உணவைச் சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் உருவானது.
பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அனைத்துக் குழந்தைகளும் அபாய கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளி உணவில் பாம்பு கிடந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியதால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கவனக்குறைவானச் சம்பவம் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். உணவைத் தயாரித்த சமையல் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை முறையாகப் பரிசோதித்த பிறகே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
